புதுடில்லி: இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், “செயல்பாட்டில் உள்ளவை” என வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பங்கு 2018-19 நிதியாண்டில் 70% ஆக இருந்தது. நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி அது 62% ஆக சரிந்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் அமைப்பு முறையை மாற்றிக் கொள்வதையே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிறிய தொடர்பு அலுவலகங்கள் அல்லது கிளை அலுவலகங்களை மூடிவிட்டு, அதிக செயல்திறன் கொண்ட வணிக மேலாண்மை மற்றும் வரி சார்ந்த நன்மைகள் கிடைக்கும் வகையில் நேரடி துணை நிறுவனங்களை பதிவு செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது முதலில் கிளை அலுவலகம் அல்லது தொடர்பு அலுவலகமாக பதிவு செய்கின்றன. வணிகம் முதிர்ச்சியடைந்ததும், அந்த அமைப்புகளை முடித்து, அதிக அதிகாரங்கள் கொண்ட துணை நிறுவனங்களை உருவாக்குவதால், பழைய வடிவிலான பதிவுகளில் “செயல்பாட்டிலுள்ள” நிறுவன எண்ணிக்கை குறைவதாக தரவுகள் காட்டுகின்றன.