புதுடில்லி: நாடு நக்சல் பிரச்னையில் இருந்து விடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் தெரிவித்தார். மீதமுள்ள இறுதி கட்ட நடவடிக்கைகள் முடிந்ததும் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

நக்சல் ஆதிக்கத்தை மார்ச் 31க்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இது தொடர்பாக அவையில் விவாதம் நடைபெற்றது. எம்.பி.க்களின் கருத்துகளுக்கு பதிலளித்த அமித் ஷா, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசு திடமான நடவடிக்கைகள் எடுத்ததாக கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக 20,000 இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 12 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நக்சல்களின் கடைசி கோட்டையாக குறிப்பிடப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதி தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருவதாகவும் அவர் கூறினார். கிராமங்களில் பள்ளிகள் அமைத்தல், ரேஷன் கடைகள் திறத்தல், மருத்துவ வசதிகள் மேம்பாடு, ஆதார் வழங்கல் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பது ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டினார்.

மார்ச் 31 இலக்கை நோக்கி பெரும்பகுதி பணிகள் முடிந்துள்ளன; சில இறுதி பணிகள் மட்டும் நடந்து வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.