மெல்போர்ன்: உலகளவில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து, மக்கள் மீது பொருளாதார அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இரண்டு மாகாணங்கள் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டு, உலகளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமையை சமாளிக்க பல நாடுகள் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.160 வரை உயர்ந்ததாகவும், இதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மக்களின் சிரமத்தை குறைக்கும் நடவடிக்கையாக, விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரயில், டிராம், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியா மாகாணத்தில் பஸ் மற்றும் படகு சேவைகள் ஜூலை 1 வரை இலவசமாக்கப்பட்டுள்ளன.