சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் இன்று சென்னையில் வெளியிட உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) பா.ஜ.க. 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் கொண்ட குறும்பட்டியல் தயாரித்து கட்சியின் தேசிய தலைமையிடம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ள பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்; அவர் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் காணொலி மாநாடு மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை பீயூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.