மனோ தங்கராஜின் தொகுதியை தி.மு.க. தலைமையகம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சிக்குள் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மனோ தங்கராஜின் ஆதரவாளர்கள் என கூறிக்கொண்ட நூற்றுக்கணக்கானோர் கூடி, அவருக்கு பத்மநாபபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் அலுவலகத்திற்குள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.
மனோ தங்கராஜ் மீது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்தாலும் மொபைல் போனை எடுப்பதில்லை என்ற புகார் உள்ளிட்ட விமர்சனங்கள் நீண்ட காலமாக உள்ளதாக கூறப்படுகிறது. தேவசம்போர்டு கோவில் விழாக்களில் அவர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், மண்டைக்காடு கோவிலில் ஏற்பட்ட பதற்றம் தொடர்பான முயற்சிகளில் அவரது பெயரும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் நாகர்கோவிலில் முகாமிட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கனிமவளக் கடத்தல் தொடர்பான பேசுபொருள்கள் மாவட்டத்தில் தொடர்ந்த நிலையில், அவர் அமைச்சர் பதவியை இழந்து, சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டதாக தகவல். இந்நிலையில் தற்போதைய போராட்டம் தலைமையகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றி புதிய பொறுப்பாளரை நியமித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.




