தேர்தல் பிரசார காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடந்த பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார்.
டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில், பிரசார பாதுகாப்பு தொடர்பான விதிகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விஜய் பிரசாரத்தில் நடந்த நிகழ்வுகள் மற்றும் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பான விவரங்களும் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




