டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சந்தேகத்துக்குப் பிறகு, அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் ஒரு மாதத்தை கடந்துள்ள சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்களில் செய்திகள் வெளியானதாகவும், அதனைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா உச்ச தலைவராக பொறுப்பேற்றதாகவும் கூறப்படுகிறது.

அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயம் அடைந்து ரகசிய இடத்தில் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல்களும் பரவின. இதற்கிடையில், பாரசீக புத்தாண்டு வாழ்த்து உள்ளிட்ட சில அறிவிப்புகள் மட்டுமே அவரது பெயரில் வெளியானதாகவும், போர் தொடர்பான நிலைப்பாடுகளும் அறிக்கைகள் வழியாகவே தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்த பின்னணியில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றாலும் அது புதிய உச்ச தலைவருடன் தானா என்பது தெளிவில்லை; அவர் உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதி செய்ய முடியவில்லை என்று டிரம்ப் கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளிவந்துள்ளது.

அந்த கடிதத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ஈராக் அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுத்ததாக கூறி, ஈராக் நாட்டின் ஷியா மதத் தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானியை பாராட்டியுள்ளார். மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் நேரடியாக தோன்றவில்லை; அவரது செய்திகள் அறிக்கைகள் அல்லது ஆடியோ வடிவிலேயே வெளியாகி வருகின்றன.