மே மாதம் ஒரு விழா நடைபெற உள்ளதாகவும், அந்த விழாவில் மீண்டும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ‘மாண்புமிகு முதல்வரே’ என்று அழைப்பேன் என்ற எதிர்பார்ப்புடன் தான் இந்த கூட்டத்திற்கே வந்ததாகவும் நடிகர் கமல் தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் டி.எம்.கே தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்து ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற கமல் பேசிய வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், கூட்டணியை “மத நல்லிணக்க முற்போக்கு கூட்டணி” என குறிப்பிட்ட கமல், முற்போக்கைத் தவிர வேறு வழியில்லை என்றும், பிற்போக்கு ஒரு தேர்வாக இருக்க முடியாது என்றும் கூறினார். அத்தகைய “மாற்றுத் தேர்வை” வேண்டாம் என்று முடிவு எடுத்தவர்களே இங்கே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் அதிகாரத்தின் அடையாளமாக கோட்டை என நினைத்த நிலையில், இப்போது தமிழகமே அதுவாக மாறிவிட்டதாக அவர் கூறினார். எதிர்க்க வேண்டிய சக்திகளை முழுமையாக எதிர்க்கும் கடமையை செய்வேன் என்றும், மற்றவர்களும் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கமல் தெரிவித்தார்.




