திருவனந்தபுரம்: வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கேரள பாஜ திங்கள்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு மாதம் ரூ.2500 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பழஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் அறிக்கையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வெல்லப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய நலவாக்குறுதிகளில், மாதம் ரூ.2500 மதிப்பிலான “உணவு-சுகாதார பாதுகாப்பு அட்டை” வழங்கப்படும் என்றும், அதைப் பயன்படுத்தி மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் தலா ஒன்று என ஆண்டுக்கு இரண்டு காஸ் சிலிண்டர்கள் இலவசம், பெண்கள், விதவைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3000 நலவாழ்வு ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், திருவனந்தபுரம்-கண்ணூர் அதிவேக ரயில்பாதை, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் புதிய மெட்ரோ சேவைகள் தொடக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் விருப்பப்பாடமாக ஆங்கில வழிக்கல்வியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர், ஊடுபயிர் சாகுபடிக்கு ஏதுவாக தோட்டக்கலை தொடர்பான சட்டங்கள் மற்றும் வனச்சட்டங்களில் திருத்தம் ஆகிய வாக்குறுதிகளும் உள்ளன. கேரளாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும், சபரிமலை தங்கக்கொள்ளை விவகாரத்தில் உரிய நேரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்றும், தேவசம் வாரியங்கள் சீரமைப்பு மற்றும் சபரிமலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




