திருவனந்தபுரம்: கேரள மாநில வளர்ச்சி பணிகள் குறித்து நேரடியாக விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் விடுத்த அழைப்பை முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப். 9 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எப்) இடையே பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷன், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அளவுக்கு கூட கடந்த 10 ஆண்டுகளில் எல்.டி.எப் அரசு மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை என குற்றம்சாட்டினார். மாநில வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதிலாக சமூக வலைதள பதிவில் முதல்வர் விஜயன், இடதுசாரி அரசின் செயல்பாடுகள் ‘ஏ பிளஸ்’ தரத்தில் உள்ளதாக குறிப்பிட்டு, அரசு வெளியிட்டுள்ள சாதனை பட்டியலை அடிப்படையாக வைத்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் தயாரா என கேள்வி எழுப்பினார். அந்த பதிவுடன் அரசின் ‘ரிப்போர்ட் கார்டையும்’ அவர் பகிர்ந்தார்.

இதையடுத்து சதீஷன், முதல்வர் கூறும் இடம் மற்றும் நேரத்தில் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.