இந்தியாவில் நாசவேலைகளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் முக்கிய தளபதி ஷபீர் அகமது லோனை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியின் பல பகுதிகளில் சமீபத்தில் தேச விரோத போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டறிந்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் சட்டவிரோதமாக ஊடுருவிய ஏழு வங்கதேசத்தினர் பணியாற்றி வந்ததும், அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு இருக்கலாம் என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டில்லி போலீசார் திருப்பூர் வந்து அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் மேலும் இரு வங்கதேசத்தினர் பிடிபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ஆய்வில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷபீர் அகமது லோனுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இரண்டு மாத தேடுதலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தின் காஜிப்பூரில் லோன் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பின்னணியில் இருந்து இயக்கியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.