நாடு முழுவதும் பள்ளிகள், அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி மிரட்டல் மெயில்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 47 வயது நபரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக டில்லியில் பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்ததாக போலீசார் தெரிவித்தனர். பள்ளி, அலுவலகங்கள் திறக்கத் தொடங்கும் காலை நேரத்தில் மெயில்கள் வருவதால், உடனடியாக மூலத்தை கண்டறிவது சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் வெளிநாட்டு முகவரிகளில் இருந்து மெயில்கள் வந்ததாக தெரிய வந்தாலும், சோதனைகளில் அவை புரளி மிரட்டல்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மெயில்கள் உண்மையில் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என்பதை டில்லி போலீசார் ரகசியமாக ஆய்வு செய்தனர்.

அந்த விசாரணையில் மெயில்கள் மைசூரில் இருந்து அனுப்பப்பட்டதாக தடம் கிடைத்தது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் முடிவில், ஸ்ரீனிவாஸ் லுாயிஸ் என்பவரே மிரட்டல் மெயில்களை அனுப்பியதாக கண்டறியப்பட்டதாக போலீசார் கூறினர்; விசாரணையில் இதுவரை 1,100 முறை மெயில்கள் அனுப்பியிருப்பதும் தெரிய வந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் கூறுகையில், அவர் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட முதுகலை பட்டதாரி. திருமணம் ஆகாத இவர், கர்நாடக அரசின் முன்னாள் ஊழியரான தாயுடன் மைசூரில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டு, மேலான விசாரணைக்காக டில்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.