ஈரான் தொடர்பான போர் பதற்றத்தை தணிக்க இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்த இருநாள் உச்சி மாநாடு, எதிர்பாராத வகையில் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. உறுதியான முடிவோ, தெளிவான செயல்திட்டமோ இல்லாமல் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்றதே காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் மத்தியஸ்த முயற்சியாக இஸ்லாமாபாதில் உச்சி மாநாட்டை கூட்டியது. இதில் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆனால், மத்தியஸ்தம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பதற்கான தெளிவான திட்டத்தை பாகிஸ்தான் முன்வைக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரான் கோரும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை நிறைவேற்றுவது குறித்து எந்த நாடும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த நாள் நடைபெற வேண்டிய கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், சவுதி அரேபியா மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்பே புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.