குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில் 126 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப். 9ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது.
இந்த சூழலில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அசாமில் பல பகுதிகளில் ஊடுருவல்காரர்கள் புகுந்து சிறுதொழில்களை கைப்பற்றி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவிகளை பா.ஜ., தொண்டர்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநிலத்திற்குள் ஊடுருவல்காரர்களை அனுமதித்தது காங்கிரஸ் என்பதையும், உள்ளூர் மக்களின் உரிமைக்காக பா.ஜ., குரல் கொடுக்கிறது என்பதையும் வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஊடுருவல் என்பது வெறும் தேர்தல் விவகாரம் அல்ல; அது தேசத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய தேசிய பிரச்னை என்றும் பிரதமர் கூறினார்.




