புதுடில்லி: சமையல் எல்பிஜி சிலிண்டர்களுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குழாய் வழி இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) இணைப்புக்கு மாறிய 6,000 நுகர்வோர் தங்கள் சிலிண்டர்களை சரண்டர் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்காசிய போர் காரணமாக எரிவாயு விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கிடைப்பை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘எஸ்மா’ (அத்தியாவசிய பொருள் பாதுகாப்பு சட்டம்) கீழ் மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அந்த உத்தரவின்படி, பி.என்.ஜி. வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் மூன்று மாதங்களுக்குள் குழாய் எரிவாயுக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாற்றத்தை மறுப்பவர்களின் எல்பிஜி இணைப்பு ரத்து செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், பி.என்.ஜி. வசதி இல்லாத பகுதிகளில் அந்த சேவையை விரிவுபடுத்தும் பணிகளையும் அரசு வேகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவுக்குப் பின் பி.என்.ஜி. இணைப்பு பெற்ற பலர், விநியோக நிறுவனங்களிடம் தங்கள் எல்பிஜி சிலிண்டர்களை திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

பெட்ரோலியத் துறை செயலர் நீரஜ் மிட்டல், இதுவரை 6,000 பேர் பி.என்.ஜி. இணைப்புக்கு மாறி சிலிண்டர்களை சரண்டர் செய்துள்ளதாக கூறினார். சிலிண்டர் கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், வாய்ப்பு உள்ளவர்கள் பி.என்.ஜி.க்கு மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.