சாத்தான்குளம் காவல் மரண வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாருக்கு ஏப்.2 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை விசாரணைக்காக அழைத்துச் சென்று, சட்டவிரோத காவலில் தாக்கியதன் விளைவாக அவர்கள் உயிரிழந்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 23 அன்று நீதிபதி முத்துக்குமரன் பிறப்பித்த உத்தரவில், இருவர்மீதும் பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாகக் குறிப்பிட்டு, 9 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனை அறிவிப்பு மார்ச் 30க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய விசாரணையில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் உடல் மற்றும் மனநலம் தொடர்பான மருத்துவ பரிசோதனைச் சான்றுகளை சிபிஐ சமர்ப்பித்தது. தண்டனையின் அளவு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு நீதிபதி, இது துாக்கு தண்டனை அல்லது குறைந்த தண்டனை என இரு வகைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய நிலையில் அரசுகளின் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினார். அறிக்கை தாக்கல் செய்யாதது நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காததை காட்டுவதாகவும், நீதிமன்ற நேரம் வீணாகிறது என்றும் குறிப்பிட்டு, அவகாசம் வழங்கி தண்டனை அறிவிப்பை ஏப்.2க்கு ஒத்திவைத்தார்.