நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவச திட்ட அறிவிப்புகளை தேர்தல் “வாக்குறுதி” என கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதை தெரிவித்தார்.

உண்மையான வாக்குறுதி என்பது கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை உரிமைகளை இலவசமாக உறுதி செய்வதும், நிலம் மற்றும் வளங்களை சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்கி மக்களுக்கு அவர்களது வாழ்விடத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் ரூ.10,000 வங்கியில் செலுத்துவேன், கல்விக்காக ரூ.20 லட்சம் கடன் தருவேன் போன்ற அறிவிப்புகள் வெறும் ஏமாற்று அறிவிப்புகள் என சீமான் விமர்சித்தார். கல்வி என்பது மக்களின் உரிமை; அதை அரசு வழங்க வேண்டும், கடனாக மாற்றுவது சரியா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பண உதவி தொகை மற்றும் சிலிண்டர் எண்ணிக்கையை போட்டிபோட்டு உயர்த்தி அறிவிப்பது நடைமுறையில் எவ்வாறு சாத்தியம் என அவர் சந்தேகம் தெரிவித்தார். அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை செயல்படுத்த கூடுதல் கடன் வாங்க வேண்டிய நிலை வரும் என்றும், அதனால் நாட்டின் வளங்களையும் மண்ணையும் அடமானம் வைத்து கடன் வாங்கும் சூழல் உருவாகும் என்றும் கூறி, இப்படியான கடன் சார்ந்த நிர்வாகத்திற்கு தலைமை ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.