சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க. அலுவலகத்தில் சட்டசபை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக தகவல். மேலும், சீட் மறுக்கப்பட்ட தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க.க்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், சீட் கோரிக்கையால் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்ததாகவும், திருமாவளவன் முன்னிலையில் நடந்த நேர்காணல்களில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்திற்கு வராமலேயே சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார். அதில், சிதம்பரம் எம்.பி.யான அவர் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதாகவும், அவரது அக்கா பானுமதி மகள் மாலதி கள்ளக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், திருமாவளவன் சந்திக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கூடுதல் தொகுதிகளை கேட்டும் கிடைக்கவில்லை; ஆனால் சூழலை உணர்ந்து ஏற்றுக்கொண்டதாகவும், கூட்டணியில் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.