த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, பின்னர் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் இரவு 7 மணி வரை பிரசாரம் நடத்த அனுமதி பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பெரம்பூரில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே மதியம் 1.30 மணியளவில் விஜய் பிரசாரம் தொடங்கினார். கொளத்தூரிலும் மாலை 4.30 மணியளவில் பிரசாரம் நடைபெற்ற நிலையில், எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பேச முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் காவல் துறை சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அங்கு பிரசாரம் மேற்கொள்ளாமல் விஜய் வீடு திரும்பினார்.

இதுகுறித்து த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பூர் பிரசாரப் பயணத்தின் பல இடங்களில் மக்கள் தன்னிச்சையாக திரண்டதாகவும், ஆனால் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் துறை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார். விஜய் மற்றும் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் பிரசாரக் கூட்டம் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.