தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், சசிகலா மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் தனித்தனியாக தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், முக்கிய சமூக வாக்குகள் பிளவுபட்டு அ.தி.மு.க. பாதிக்கப்படலாம் என கட்சியின் சில அமைப்புச் செயலர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்த “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை எடப்பாடி கே. பழனிசாமி ஏற்கவில்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக கருதிய சசிகலா புதிய கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வேட்பாளரையும் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்கள் கூறுகையில், சசிகலா கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ள 21 தொகுதிகள் முக்குலத்தோர் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகள் எனவும், சங்கரன்கோவில், திட்டக்குடி, ஸ்ரீபெரும்புதூர், பரமக்குடி உள்ளிட்ட 14 தொகுதிகளில் அ.தி.மு.க.க்கு எதிராகவே போட்டியிடும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். ஒரு தொகுதிக்கு சில ஆயிரம் வாக்குகள் கூட சென்றால், அது அ.தி.மு.க. எதிர்பார்க்கும் முக்குலத்தோர் வாக்குகளிலிருந்தே குறையக்கூடும் என அவர்கள் மதிப்பிட்டனர்.
மேலும், அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்க கிருஷ்ணசாமி முயன்றும் அது அமையாததால் அவர் தனித்து போட்டியிடுவதாகவும், அ.தி.மு.க.க்கு எதிராக பிரசாரம் செய்தால் ஓட்டப்பிடாரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.
இதன் விளைவாக, தென் மாவட்டங்களில் நாடார், முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பெரிய சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பது கடினமாகலாம் எனவும், கடந்த முறையும் சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி கிடைத்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதைய சூழலில் வேட்பாளர்கள் அச்சத்தில் உள்ளதாகவும், இதை சமாளிக்க தெளிவான வியூகம் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



