புதுச்சேரி பிரசாரத்தின் நடுவே வந்த அவசர அழைப்பு

புதுச்சேரியில் பா.ஜ. வேட்பாளர்களுக்காக நேற்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வருமாறு அழைத்து மையக் குழு கூட்டத்தில் பங்கேற்பு

முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இருப்பதாகவும், உடனடியாக சென்னை வர வேண்டும் என்றும் கோயல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறியதாக தகவல். இதையடுத்து அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தல்

அந்த கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தலைமையின் விருப்பம் என கோயல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற தலைவர்கள் போட்டியிடும் நிலையில் அவர் மட்டும் ஒதுங்கினால், கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல வெளிப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக தகவல்.

தலைமையின் உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே என அண்ணாமலை நிலைப்பாடு

அ.தி.மு.க.விடமிருந்து பா.ஜ.க்கு கிடைத்த தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்றும் கோயல் கேட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அண்ணாமலை முதலில் மறுத்ததாகவும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. போட்டியிடுவதற்கு கட்சித் தலைமையிடமிருந்து உத்தரவாதம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல்.