திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்கள் வாக்காளர்களை குறிவைத்து பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நலத்திட்டங்கள், சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மாநிலத்தின் 140 தொகுதிகளுக்கும் ஏப். 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

“மேம்பட்ட கேரளம்” என்ற இலக்குடன், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் திருவனந்தபுரத்தில் அறிக்கையை வெளியிட்டார். நிகழ்வில் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தே.ஜ. கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.

அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மளிகை மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள ரீசார்ஜ் கார்டு “பக்‌ஷய ஆரோக்யா” என்ற பெயரில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், சபரிமலையில் தங்கம் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்துதல், தேவஸ்வம் போர்டுகளை மாற்றியமைத்து கோவில் நிர்வாகத்தில் பக்தர்களின் பங்கைக் கூட்டுதல், கோவில்களில் ஊழலை ஒழித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சபரிமலை பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த “சபரிமலை உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம்”, விழிஞ்ஞம் துறைமுகத்தை தொழிற்துறை மையமாக மேம்படுத்தல், திருவனந்தபுரம்–கண்ணூர் வரை அதிவேக ரயில் பாதை, மேலும் திருவனந்தபுரத்தை ஐ.டி. மற்றும் புத்தாக்கத் தலைநகராக மாற்றுதல் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.