சென்னை: நாட்டிலுள்ள அனைத்து ரத்த வங்கிகளும் தங்களிடம் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளின் கையிருப்பு விவரங்களை ‘e-RaktKosh’ இணையதளத்தில் பதிவு செய்து புதுப்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ரத்த வங்கிகள் மற்றும் சேமிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஒழுங்குமுறை கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சுட்டிக்காட்டி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ரத்த வங்கிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், இருப்பில் உள்ள ரத்த அளவுகளை துல்லியமாக அறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள் அங்கீகாரம் பெற்ற அனைத்து ரத்த வங்கிகளும் மத்திய அரசின் e-RaktKosh தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும், ரத்த அலகுகள் மட்டுமல்லாமல் ரத்த கூறுகளின் இருப்புகளும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின் மூலம் மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ரத்தம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய முடியும் என்றும், அவசர நேரங்களில் தேவையான ரத்தத்தை விரைவாகக் கிடைக்கச் செய்து நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



