புதுடில்லி: 20 சதவீதம் எத்தனால் கலந்த ‘இ-20’ பெட்ரோல் விற்பனை இன்று முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவின்படி, ஏப்.1 முதல் இந்தியாவின் அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் ‘இ-20’ பெட்ரோல் வினியோகம் அமலுக்கு வருகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தணிப்பது மற்றும் எத்தனால் தேவையை உயர்த்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், இன்று முதல் வாகன விலை 0.5% முதல் 2% வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. டாடா கார்கள் 0.5% வரை, டாடா வர்த்தக வாகனங்கள் 1.5% வரை, எம்.ஜி. கார்கள் 2% வரை; பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி போன்ற சொகுசு கார்கள் 2% வரை விலை உயர்த்தப்பட உள்ளன.
மத்திய கிழக்கு போர் சூழல், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பிழப்பு, ஸ்டீல் மற்றும் அலுமினியம் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு, வினியோகத் தொடர் சிக்கல்கள் உள்ளிட்டவை விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள் என வாகன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.




