டெஹ்ரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போர் பின்னணியில், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டை ஈரான் மேலும் கடுமையாக்கி வருகிறது.
தற்போது அந்த ஜலசந்தி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையால் (IRGC) முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டுமே அங்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரான் கூறியது.
இந்நிலையில், ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு ஈரான் பார்லிமென்ட் பாதுகாப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. திட்டத்தின் படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களிடமும் ஈரானிய ரியால் நாணயத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், கப்பல்கள் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு தடையிடும் வகையிலும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




