உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல தனியார் மருத்துவமனைகள் வழியாக நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக தானம்/மாற்று அறுவை சிகிச்சை வலையமைப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஐந்து டாக்டர்கள் மற்றும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடையாளருக்கு வாக்குறுதியான பணம் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் கூறுவதன்படி, பீஹாரைச் சேர்ந்த, எம்.பி.ஏ. முடித்த ஆயுஷ் என்பவர் வேலை காரணமாக மீரட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வறுமையை பயன்படுத்தி ஷிவம் அகர்வால் என்பவர் ரூ.10 லட்சம் தருவதாக கூறி சிறுநீரகம் தானம் செய்ய கேட்டுள்ளார்.

ஆயுஷ் சம்மதித்த பின்னர், கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த உறுப்பை மீரட்டைச் சேர்ந்த பரூல் தோமர் என்பவருக்கு ரூ.60 லட்சத்திற்கு விற்றதாகவும், ஆனால் கொடையாளருக்கு ரூ.3.5 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஆயுஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் தொடர்ச்சியாக ‘மெட்லைப்’, ‘அஹுஜா’, ‘பிரியா’ ஆகிய மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் டாக்டர் பீரித்தி அஹுஜா, அவரது கணவர் டாக்டர் சுர்ஜீத் சிங் அஹுஜா, ராம் பிரகாஷ், ராஜேஷ் குமார், நரேந்திர சிங் ஆகிய மருத்துவ நிபுணர்கள் கைது செய்யப்பட்டனர். ‘டெலிகிராம்’ செயலி மூலம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து தொடர்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் இடைத்தரகர் ஷிவம் அகர்வாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர்கள் மீது உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 50–60 சட்டவிரோத மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கலாம் என்றும், லக்னோ, டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் நேபாளம் வரை வலையமைப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கொடையாளரும், உறுப்பைப் பெற்றவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.