வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த ஒரு சம்பவம் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நேற்று காட்பாடியில் ஓட்டு கேட்டு சென்றபோது, பிரசார வேனில் வி.சி.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலர் பிலிப் ஏறியதாகவும், அதனைத் தொடர்ந்து அவரிடம் வேனில் ஏற வேண்டாம் என்றும் கீழே இறங்குமாறும் அமைச்சர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வி.சி.க. தொண்டர்கள் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த தேர்தல்களில் சில பகுதிகளில் பிரசாரம் செய்யும்போது வி.சி.க. கொடியை கழற்றிவிட்டு தி.மு.க. பிரசாரம் செய்ததாகவும், சுவர் விளம்பரங்களில் தங்கள் தலைவர் பெயரை தவிர்த்ததாகவும் கூறிய அவர்கள், இப்போது வேனிலிருந்து இறங்கச் சொன்னது கட்சியை அவமதிப்பதாகவே பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பிலிப் கூறுகையில், அமைச்சர் யதேச்சையாகவும் அப்படிச் சொல்லியிருக்கலாம் என்றாலும், இந்த நிகழ்வால் வி.சி.க. தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார்.