மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பீஹார், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ஜ. முயற்சிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பா.ஜ.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு மேதினிபூர் மாவட்டம் சந்திரகோணாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, அனைத்து தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும், “நான் எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறேன்” என்ற எண்ணத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேர்தலில் வெல்ல பா.ஜ. குறுக்கு வழிகளை நாடுவதாகவும் அவர் கூறினார்.

பீஹாரில் நடந்ததுபோல் ரயிலில் வெளிமாநில வாக்காளர்களை அழைத்து வந்து அசன்சோல், கரக்பூர் போன்ற தொகுதிகளில் வாக்களிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய மம்தா, உடனடி தலையீடு வேண்டும் என வலியுறுத்தினார். சட்டவிரோதமாக வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க முயன்றால் அதற்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும், அரசியலமைப்பு அமைப்புகளை பா.ஜ. கட்சி அலுவலகங்களாக மாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.