புதுடில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்ததை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி அவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏழு நாட்களாக தொற்று பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், பாக்டீரியா உள்ளிட்ட நோய்க்கிருமிகள் ரத்தத்தில் நுழையும்போது உடல் முழுவதும் தொற்று பரவக்கூடும் என்றார். சிகிச்சையின் போது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது உடல்நிலை மேம்பட்டதால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் கூறினர்.