தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாளில், திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “ஏழைகளின் சுருக்குப்பையில் இருக்கும் கடைசி காசையும் உருவுவதற்கு பா.ஜ.க. திட்டம் போடுகிறது” என்று குற்றம்சாட்டினார். மக்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் பா.ஜ.க.-க்கு எரிச்சலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்காக ரூ.3,000 வழங்கியதாகவும், பிப்ரவரியில் மகளிர் உரிமைத் தொகையாக கோடை கால சிறப்பு நிதியுடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு “சூப்பர் ஸ்டார்” என பெயரிட்டுள்ளதாகவும், அதில் வாக்குறுதிகள் மட்டுமல்ல; அடுத்த தி.மு.க. அரசு நிறைவேற்ற உள்ள திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பா.ஜ.க. தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தை கலவர பூமியாக்கும் வகையில் பொய் செய்திகள் பரப்ப முயன்றதாகவும், அது தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார். தி.மு.க.-வை எதிர்க்க பா.ஜ.க.-க்கு வலிமை இல்லாததால் அ.தி.மு.க.-வை “விலைக்கு வாங்கியுள்ளது” எனவும் விமர்சித்து, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சிறப்பு விமானத்தில் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்த ஸ்டாலின், அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து, பைகள் மற்றும் உடைமைகளில் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். சில நிமிடங்கள் நடந்த இந்த சோதனையில் முதல்வர் ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.