சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை சமூக வலைதளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல, பா.ஜ.க. ஏழு அணிகள் மற்றும் 25 பிரிவுகளின் நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ‘முத்ரா’ கடன்கள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பிரதமரின் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க. தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்றும் பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களில் சமூக வலைதள பதிவுகளை அதிகமாக பார்க்கும் சூழலில், பொய் பிரசாரங்களை முறியடிக்க கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்களை அதிகமாக பதிவிட வேண்டும் என நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளப் பதிவுகளுக்காக மத்திய திட்டங்கள் தொடர்பான விவரங்களை கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு அனுப்பும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.