ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல் விலை 2022க்கு பின் முதன்முறையாக கேலனுக்கு 4 டாலரை கடந்துள்ளது.

3.78 லிட்டர் அளவுள்ள ஒரு கேலன் சாதாரண பெட்ரோலின் தேசிய சராசரி விலை தற்போது 4.02 டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹378 ஆகும்; போர் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை விட ஒரு டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் டெலிவரி லாரிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன் கேலனுக்கு சுமார் ₹353 இருந்த டீசல், தற்போது சுமார் ₹512 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. போர் நீடித்தால் விலைகள் மேலும் உயரலாம் என்ற அச்சமும் உள்ளது.

அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருந்தாலும், எண்ணெய் உலகளாவிய வணிகப் பொருள் என்பதால் விலை ஏற்றத்திலிருந்து முழுமையாக தப்ப முடியாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 2022 ஜூனில் உக்ரைன் போர் காலத்தில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலனுக்கு சுமார் ₹470-ஐ தாண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், ஏ.எப்.பி. மேற்கோள் காட்டிய பொது கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கான ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், டிரம்பின் நிகர ஆதரவு மைனஸ் 17% ஆக சரிந்துள்ளதாகவும், பிப்ரவரி இறுதியில் தொடங்கிய ஈரான் மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இதற்குக் காரணமாக கூறப்படுவதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.