த.வெ.க. தலைவர் விஜயின் தேர்தல் வேட்புமனுவுடன் வெளியான சொத்து விவரங்களில், TVS XL மொபட் வாகனம் இடம்பெற்றது கவனம் பெற்றுள்ளது. பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவை அவர் மார்ச் 30 அன்று தாக்கல் செய்திருந்தார்.
சொத்து பட்டியலின்படி, விஜய்க்கு ரூ.600 கோடிக்கு மேல் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும், விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு ரூ.67,000க்கு வாங்கியதாக கூறப்பட்ட மொபட் பட்டியலில் இருப்பது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலில் அந்த மொபட் வீட்டுப் பணியாளர்களுக்காக வாங்கியிருக்கலாம் என்ற பேச்சு இருந்த நிலையில், அது விஜயின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கே வாங்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியாகச் செல்ல விரும்பும் பழக்கம் காரணமாகவே அவர் இதை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அதே வட்டாரங்களின் தகவலின்படி, அதிகாலையில் கிழக்கு கடற்கரை சாலை மட்டுமின்றி, வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களிலும் அவர் அவ்வப்போது மொபட்டில் வலம் வருவார். அருகிலுள்ள கட்சி அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கும் ஹெல்மெட் அணிந்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மாறுவேடத்தில் வெளியே செல்வது போல, விஜயும் கவனம் ஈர்க்காமல் இருக்க மொபட்டில் சுற்றுவதாக கட்சி வட்டாரங்கள் ஒப்பிட்டு கூறுகின்றன.




