சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர்-அரசியல்வாதி விஜய், புதன்கிழமை திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவர் மார்ச் 30 அன்று பெரம்பூரில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

திட்டமிட்டபடி, புதன்கிழமை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து ஊர்வலமாக அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து மரக்கடை பகுதியில் உள்ள தனியார் இடத்தில் பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் போலீஸ் உதவி கமிஷனரிடம் மனு அளித்த நிலையில், விஜய் ஒரு வாகனத்தில் வந்து மனு தொடர்பான பணிகளை முடித்து, மதியம் 12:30 மணிக்கு மரக்கடை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், விஜயை யாரும் வாகனங்களில் பின்தொடரக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். மேலும், பிரசார கூட்டத்தில் குழந்தைகள், மகளிர், முதியோர் மற்றும் கர்ப்பிணியர் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.