கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டசபைத் தொகுதியில் தன் பதிலாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்ததால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில அரசியலில் கவனம் செலுத்தும் நோக்கில், சட்டசபைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் திடீரென முடிவை மாற்றி, மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜோதிமணி தற்போது காங்கிரஸிலேயே இருப்பது தெரிய வந்தது. மேலும், அந்தத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தன்னிடம் யாரும் நேரில் கேட்கவில்லை; திடீரென தகவல் வந்ததாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோதிமணி கூறுகையில், காங்கிரசில் வேட்பாளர் வாய்ப்புக்காக விருப்பமனு அளித்திருந்ததாகவும், திருமாவளவன் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அடுத்து என்ன செய்ய வேண்டும், விசிக சின்னமா அல்லது காங்கிரஸ் சின்னமா என்பதையும் தலைவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்த பிறகு அதன்படி நடப்பேன் என்றார்.
இதற்கிடையில், விசிகவில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் கட்சியில் இல்லாத ஒருவரை அறிவித்தது ஏன் என்ற கேள்வி கட்சியினரிடையே முனுமுனுப்பை உருவாக்கியுள்ளது. மேலும், காங்கிரஸ் நிர்வாகிக்காக திருமாவளவன் தன் தொகுதியை விட்டுக்கொடுத்ததன் பின்னணியில் ஏதேனும் அழுத்தம் அல்லது கூட்டணி சார்ந்த காரணங்கள் உள்ளதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.




