சென்னை பெரம்பூர் சட்டசபைத் தொகுதிக்காக தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
வரும் சட்டசபைத் தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் அவர் வேட்புமனுக்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார். பெரம்பூர் தொகுதிக்கான முதற்கட்ட பிரமாணப் பத்திரத்தில் தன்ன்மீது குற்ற வழக்குகள் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதிக்கான ஆவணங்களில் இரண்டு வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதில் ஒன்று மார்ச் 30 அன்று பெரம்பூர் பிரசாரத்தின் போது பதிவு செய்யப்பட்டதாகவும், மற்றொன்று 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மதுரை மாநாடு தொடர்பானதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் மாறுபட்ட தகவல்கள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் 2025 மதுரை மாநாடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கொளத்தூரில் பிரசாரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விவரங்களை விஜய் சேர்த்துள்ளார்.
மேலும், இரு பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்ட வயதில் இருந்த வேறுபாடு தொடர்பாகவும் திருத்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




