தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, நடப்பு சட்டசபை தேர்தலில் வேட்பாளராக நிற்பதை விட, ஒவ்வொரு தொகுதியிலும் சென்று பிரச்சாரம் செய்வதே தனது முதன்மை இலக்கு என்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமையிடம் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததாக கூறினார். அதே தகவலை கட்சியின் முக்கிய உயர்மட்ட தலைவர்களிடமும் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.
கட்சித் தலைமை தன்னை பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அண்ணாமலை, தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றார்.
தி.மு.க.வின் தவறுகளை எடுத்துச் சொல்ல வலிமையாக பேசுவது தனது பொறுப்பு என குறிப்பிட்டார். தாம் போட்டியிடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுவதாகவும், ஆனால் தனது பெயர் தமிழக பாஜக தேர்வு குழுவிலிருந்தே மேல்மட்டத்துக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், பாஜக தலைமையால் எப்படி ‘சீட்’ வழங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தாம் போட்டியிட விரும்பவில்லை என்பதால் கட்சித் தலைமை பிரச்சாரம் செய்யச் சொல்லியுள்ளதாகவும், அதனால் தலைமையை குறை கூற முடியாது என்றும் தெரிவித்தார்.




