புதுடில்லி: ஈரான் தொடர்பான மேற்காசிய போர் நெருக்கடி மற்றும் அதன் பின்னணியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் புதிய கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது.
ராகுல், மோடி தலைமையிலான மத்திய அரசு நெருக்கடியை சரியாக கையாளவில்லை என்றும், வெளியுறவு கொள்கையில் சமரசம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு மாறாக கமல்நாத், ஆனந்த் சர்மா, சசி தரூர், மணிஷ் திவாரி ஆகிய மூத்த தலைவர்கள், தற்போதைய சூழலை மத்திய அரசு பொறுப்புடன் மற்றும் திறம்பட கையாளுகிறது என வெளிப்படையாகப் பாராட்டினர்.
சசி தரூர், மத்திய அரசு “மிகப் பொறுப்புடன்” செயல்படுகிறது என கூறியதாகவும், மணிஷ் திவாரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் துாதரக ரீதியில் சரியான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரும் இக்கட்டான சூழலை அரசு திறம்பட சமாளிக்கிறது என பேசினர்.
இதற்கிடையில், நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் குற்றஞ்சாட்டிய நிலையில், கமல்நாத் “எங்கும் தட்டுப்பாடு இல்லை; தட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல் தான்” என கூறி வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார்.
இந்த கருத்துகளை முன்வைத்து பா.ஜ., காங்கிரஸை தாக்கியது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, எல்பிஜி, பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என கமல்நாத் ஒப்புக்கொண்டதாக கூறி, அரசியல் ஆதாயத்திற்காக பொய்யான தகவல்கள் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என விமர்சித்தார். பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரியும் ராகுலை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸுக்குள் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின் நடந்ததாக குறிப்பிடப்படும் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ விவகாரத்தின் போதும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், தற்போது மேற்காசிய போர் விவகாரம் மீண்டும் அந்தப் பிளவை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.




