கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலரும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓசூர் தொகுதி சீட் மேயர் சத்யாவுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரகாஷ் 2016-ல் தளி தொகுதியில் வெற்றி பெற்றவர். 2021 தேர்தலில் அவர் ஓசூர் தொகுதிக்கு மாற்றப்பட்டார். இம்முறை வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட தி.மு.க. தலைமை அழுத்தம் கொடுத்ததாகவும், ஒவ்வொரு தேர்தலுக்கும் தொகுதி மாற முடியாது என அவர் மறுத்ததால் சீட் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மார்ச் 31-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தளி தொகுதி இ.கம்யூ. வேட்பாளர் ராமச்சந்திரன், ஓசூர் தி.மு.க. வேட்பாளர் சத்யா, வேப்பனஹள்ளி தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பின்னர் சூளகிரி அருகேயுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ரிசார்ட்டில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிரகாஷின் தோளில் கை வைத்து பேச முயன்றபோது, பிரகாஷ் கடும் கோபத்துடன் எதிர்வினை காட்டி, கை எடுக்குமாறு கூறியதாகவும், “என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது இதுபோன்ற செயல்கள்தான்” எனக் கூறியதாகவும் தகவல்.

தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், கிருஷ்ணகிரிக்கான பொறுப்பு அமைச்சராக உள்ள சக்கரபாணியே மீண்டும் பிரகாஷுக்கு சீட் கிடைக்காமல் போக காரணம் என்ற தகவலால் அவர் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பிரகாஷ் இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத அமைச்சர், இப்போது அவருக்கு துரோகம் செய்ததாக ஆதரவாளர்கள் கருதுவதாகவும் கூறினர்.