ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள காந்தி சிலையிடம், ஈரோடு கிழக்கு தொகுதி காங். வேட்பாளர் கோபிநாத்தை மாற்றக் கோரி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்ட காங். நிர்வாகிகள் வேட்பாளர் மாற்றத்தை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை 10.15 மணியளவில், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், முன்னாள் தலைவர் ரவி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
அப்போது வந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மாலை அணிவிப்பதற்கோ மனு அளிப்பதற்கோ முன் அனுமதி பெற வேண்டும் என்றும், மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.
இருப்பினும், குழுவினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, வேட்பாளரை மாற்றக் கோரி முறையிட்டனர். திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவருக்கு ஈரோட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதிருப்தி தெரிவித்த மக்கள்ராஜன், கட்சி தலைமைக்கு கடிதம் மற்றும் மெயில் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
வேட்பாளர் மாற்றம் மறுக்கப்பட்டால் எதிர்த்து வேறு ஒருவரை நிறுத்துவோம் என்றும், கட்சி தலைமையிடம் தங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் மேலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில், போராட்டத்துக்கு அனுமதி கோரி மக்கள்ராஜன் மனு அளித்தார்.




