தமிழ்நாடு வனத்துறையில் 2021–25 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளில் சில மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பெரும்பாலானவை அறிவிப்போடு நிற்கின்றன.
வனப்பகுதிகளில் அன்னிய களைத் தாவரங்களை அகற்றி வனச்சூழலை மேம்படுத்த தனிக் கொள்கை உருவாக்குவது, வனத்துறை ஆய்வு ஆவணங்களை பாதுகாக்க மாநில வன ஆவண களஞ்சியம் மற்றும் வன தரவு மையம் அமைப்பது போன்ற திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வன நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்த ஆலோசனை நிறுவனங்கள் உதவியுடன் விரிவான வணிக ஆய்வு மேற்கொள்ளும் அறிவிப்பும் இடம்பெற்றது.
சூழல் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு சார்ந்த அறிவிப்புகளாக, மலைப்பகுதிகளில் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் புதிய சூழல் சுற்றுலா வழித்தடங்கள் அமைத்தல், களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர் பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் உருவாக்குதல், மேலாண்மை மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துதல் ஆகியவை குறிப்பிடப்பட்டன. மேலும் பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு மையம் அமைத்தல், ‘ராம்சார்’ தளமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் மற்றும் திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளல் போன்ற அறிவிப்புகளும் உள்ளன.
திருவள்ளூர் பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாத் திறன் மற்றும் உள்ளூர் மக்களின் சமூக–பொருளாதார நிலை மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு, ராமநாதபுரம் ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழலியல் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. கோவையில் தமிழக வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம், தஞ்சாவூர் கும்பகோணம் வனச்சரக எல்லையில் அணைக்கரையில் சதுப்புநில முதலைகள் பாதுகாப்பு மையம், நீலகிரி கூடலூர் மற்றும் கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆர்க்கிட் செடி பாதுகாப்பு மைய மேம்பாடு போன்ற திட்டங்களும் பட்டியலில் இடம்பெற்றன.
மேலும் பல மாவட்டங்களில் வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைப்பதும், திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க 1 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அதிவிரைவுப்படை அமைப்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டமும் உட்பட பல அறிவிப்புகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




