டெஹ்ரானில் இருந்து வெளியான தகவலின்படி, ஈரான் தனது வான்வெளியில் பறந்த இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. ஈரான் ஒருபுறம், அமெரிக்கா-இஸ்ரேல் மறுபுறம் என நீடிக்கும் மோதல் 36வது நாளிலும் தொடரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல்படை (IRGC) தெற்கு ஈரானில் அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை வீழ்த்தியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விமானத்தின் மதிப்பு ரூ.289 கோடி என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க சிறப்பு படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, எப்-15 விமானத்தில் இருந்த இரு பைலட்டுகளில் ஒருவரை மீட்டதாகவும், மற்றொருவர் இன்னும் காணாமல் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மீட்பு முயற்சியின் போது இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் ஈரானிய தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சிறு சேதத்துடன் திரும்பியதாகவும், ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ‘ஏ-10 வார்த்ஹாக்’ தாக்குதல் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ரூ.174 கோடி மதிப்புள்ள அந்த விமானம் தீப்பற்றி குவைத் வான்வெளிக்குள் சென்று விழுந்ததாக கூறப்படுகிறது; பைலட் பாராசூட் மூலம் தப்பி பின்னர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை IRGC பெரிய வெற்றியாகக் கொண்டாடி, காணாமல் போன அமெரிக்க பைலட்டை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நடப்பு போரில் முதன்முறையாக வானிலேயே அமெரிக்க விமானம் நேரடியாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலான காலத்தில் 16 அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாகவும்—சில தரையில் நிறுத்தியிருந்தபோது தாக்கப்பட்டதும், சில நட்பு நாடுகளின் தவறான தாக்குதலாலும் பாதிக்கப்பட்டதும்—ஈரான் தரப்பு கூறியுள்ளது.