காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று சனிக்கிழமை தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங். வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அவர் இந்த உறுதியை அளித்தார்.

இ.சி.ஆர். மீன் அங்காடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, புதுச்சேரியில் உள்ள தே.ஜ. கூட்டணி அரசு ஊழலில் மூழ்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். ஒப்பந்தங்களில் 30% கமிஷன் பெறப்படுவதாகவும், சிறிய மாநிலங்களை மத்திய பா.ஜ. அரசு நசுக்க முயல்கிறது என்பதற்குப் புதுச்சேரி உதாரணம் எனவும் கூறினார்.

மேலும், அரசு சொத்துகள் மற்றும் கோவில் நிலங்கள் சூறையாடப்படுவதாகவும், எந்த ஒப்பந்தத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் விமர்சித்தார். குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலையில், மதுபான தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

காங். வாக்குறுதிகளாக, 2026ல் காங். ஆட்சியில் கட்டாய கல்வி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கார்கே தெரிவித்தார். ரேஷன் கார்டுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி, காங். வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில காங். தலைவர் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டத்தை வரவேற்றார்.