ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, துாத்துக்குடியில் முதல்வர் வருகை வரவேற்பில் பங்கேற்காமல் இருந்த நிலையில், தி.மு.க.வில் சீட் கிடைக்காத அதிருப்தியால் த.வெ.க. டிக்கெட்டில் அதே தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சண்முகையாவுக்கு 2021ல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஓட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளராக, அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் கட்சியினர் மத்தியில் அவருக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற பேச்சும் உள்ளது.
இதற்கிடையே, தென் மாவட்டப் பிரச்சாரத்திற்காக தனி விமானத்தில் துாத்துக்குடி வந்த முதல்வரை வரவேற்க சண்முகையா செல்லவில்லை. அதே நாளில் நடந்த தேர்தல் தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
சண்முகையா குடும்பத்துக்கு ஓட்டப்பிடாரத்தில் தனி செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது அண்ணன் தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசனை சுயேச்சையாக நிறுத்த சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதே நேரத்தில், த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதன்ராஜா வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக இருந்தபோது கட்சி தலைமை தடுத்து வைத்ததாகவும், சண்முகையாவை இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பேச்சுகள் சாதகமாக முடிந்தால் நாளை சண்முகையா த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.




