பா.ம.க.வில் உள்ளக பிளவு சூழலில், நிறுவனர் ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்களில் பலர் போட்டியிட விருப்பமில்லை என கூறி விலகி வருவதால் அவர் மனவருத்தத்தில் உள்ளதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. அன்புமணி தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை தோல்வியடையச் செய்யும் நோக்கில், 18 தொகுதிகளில் 10 இடங்களுக்கு ராமதாஸ் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை ஆறு கட்டங்களாக மொத்தம் 37 வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார். ஆனால் அறிவிக்கப்பட்டவர்களில் சிலர் போட்டியிட விருப்பமில்லை என கூறி ‘எஸ்கேப்’ ஆகி வருவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

மேலும் சிலர் ராமதாஸின் அழைப்புகளை தவிர்க்க மொபைல் போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைத்துள்ளதாகவும், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கடைசி வரை ராமதாஸுடன் பயணித்ததாக கூறப்படும் கட்சித் தலைவர் மணி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மறைமுக பேச்சு நடத்தி, தனது சொந்த தொகுதியான பென்னாகரத்தில் தனது மகன் தமிழ்குமரனை காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தைலாபுரம் தோட்டத்துக்கு செல்வதை பலர் தவிர்ப்பதுடன், போன் அழைப்புகளையும் ஏற்க மறுப்பதால் ராமதாஸ் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக கட்சித் தரப்பு தெரிவிக்கிறது.