அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில், தமிழகத்தில் பிறந்த ரினி சம்பத் (31) போட்டியிட உள்ளார். இந்தப் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசியர் என்ற வகையில் அவர் கவனம் பெற்றுள்ளார்.

வாஷிங்டன் மேயர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி, ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் தேசிய கல்லூரி தலைமை கவுன்சிலில் கொள்கை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அதன்பின், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் முன்னணி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளர் போட்டியில் ரினி சம்பத் பங்கேற்கிறார். இதற்குத் தேவையான 4,500 கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை அவர் பெற்றுள்ளதாக செய்தி கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரே வெற்றி பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.