சென்னை: இந்திய மொழிகளை ஊக்குவிப்பதாக கூறி மத்திய அரசு மாநிலங்களுக்கு “பாடம் எடுக்க” முயல்கிறது; அது பொறுப்புணர்வல்ல, கபட நாடகத்தின் உச்சம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
அறிக்கையில், சமீபத்தில் அறிமுகமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் சாதாரண கல்வி சீர்திருத்தம் அல்ல; மொழி திணிப்பை நோக்கிய நடவடிக்கை என அவர் தெரிவித்தார். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதாகும் போர்வையில், நாட்டின் பன்மைத்துவ மொழிப் பாரம்பரியத்தை ஒதுக்கி, ஹிந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் முயற்சி நடக்கிறது என்றும், பா.ஜ.க. தலைமையிலான அரசு இதை அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கிறது என்றும் கூறினார்.
மும்மொழி கொள்கை என்பது ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை விரிவுபடுத்தும் முயற்சி என ஸ்டாலின் விமர்சித்தார். ஹிந்தி பேசும் மாநில மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளை கட்டாயமாக படிப்பார்களா என கேள்வி எழுப்பி, இதில் உள்ள தெளிவின்மை ஒரு சார்பையும் பாகுபாட்டையும் காட்டுகிறது என்றார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை உறுதியாக நிராகரிக்கப்படுகிறது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துகள் பொறுப்பற்றவை என கூறிய ஸ்டாலின், ஹிந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காக சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். தமிழக பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டையும் ஆதாரமற்றது என மறுத்த அவர், ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும் என அமைச்சர் அறிவிப்பாரா என சவால் விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை “மொழி விடுதலை”யை வலியுறுத்துகிறது; மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கே முன்னுரிமை தருகிறது என்றார். கொள்கையை கட்டாய ஹிந்தி என தவறாக சித்தரிப்பதாக தி.மு.க.வை விமர்சித்த அவர், பன்மொழித் திறன் தமிழை பலவீனப்படுத்தாது; மாறாக வலுப்படுத்தும் என்றும் கூறினார். மேலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக மாணவர்களின் வாய்ப்புகளை மறுப்பதாகவும், நிர்வாகத் தோல்விகளை மறைக்க ஹிந்தி திணிப்பு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




