அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேசம்’ என்று மாற்றுவதற்கும் தயங்க மாட்டார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். முன்னதாக கவர்னர் ஆர்.என். ரவி ‘தமிழ்நாடு’ என்பதற்குப் பதிலாக ‘தமிழகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியபோது ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு, மாநிலத்தின் பெயரைச் சுற்றி புதிய அரசியல் மோதல் உருவாகியுள்ளது.
‘தட்சிண பிரதேசம்’ என்ற கருத்து 70 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நேரு காலத்தில் நிர்வாக வசதிக்காக மாகாணங்களை மறுசீரமைப்பது குறித்து விவாதம் நடந்த நிலையில், மாநிலப் பிரிவின் அடிப்படை மற்றும் எல்லைக்கோடு குறித்து ஆய்வு செய்ய தார் கமிஷன், ஜே.வி.பி. கமிட்டி, பஸல் அலி கமிஷன் உள்ளிட்ட பல குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்கள் மொழிவாரி மாநிலங்கள் சுதந்திர இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்றே அறிக்கைகள் அளித்ததாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. அதன்பேரில் தட்சிண, உத்தர, கிழக்கு, மேற்கு, மத்திய என ஐந்து பெரும் மாநிலங்கள் அமைக்கும் யோசனையை நேரு அறிவித்ததாகவும், அதில் ‘தட்சிண பிரதேசம்’ என்ற அமைப்பில் அன்றைய மதராஸ் மாகாணம் (இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா), திருவிதாங்கூர்–கொச்சின் (இன்றைய கேரளம்), மைசூர், பம்பாய் மாகாணம் மற்றும் ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் கன்னட பெரும்பான்மை பகுதிகள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஒன்றுபட்ட தென் மாநிலம் உருவானால் பொருளாதார வளர்ச்சி மேம்படும், மொழி சார்ந்த பிரச்னைகள் குறையும், மேலும் மதராஸ்பட்டினம் யாருக்கு என்ற தமிழர்–தெலுங்கர் இடையிலான நீண்டகால பனிப்போரையும் தவிர்க்க உதவும் என ஆதரவாளர்கள் கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தென்னிந்திய முழுவதும் எதிர்ப்பு எழுந்ததாகவும், தமிழ்நாட்டில் இடதுசாரிகள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள், கேரளத்தில் அச்சுதமேனன், ஏ.கே. கோபாலன் உள்ளிட்ட இடதுசாரிகள் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
எதிர்ப்புகளை ஒருங்கிணைக்க ம.பொ.சி. (ம.பொ. சிவஞானம்) முன்னிலை வகித்ததாகவும், 1956 ஜனவரி 27 அன்று மதராஸ்பட்டினத்தில் ஜீவா, பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், ம.பொ.சி., டி.கே. சண்முகம், பி.டி. ராஜன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கூடி ‘தட்சிண பிரதேசம்’ யோசனையை நிராகரித்து மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டும், மதராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டும், இதற்காக காமராஜர் அரசை வலியுறுத்த வேண்டும் என தீர்மானித்ததாகவும் கட்டுரை தெரிவிக்கிறது. இதன் தொடர்ச்சியாக மாநிலமெங்கும் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு மற்றும் நகரில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




