கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (இ.பி.எஸ்.) கடுமையாக விமர்சித்தார்.
வெளியுறவு கொள்கையை கையில் வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களை காக்க தவறியதாக அவர் குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்வதாக கூறிய அவர், இதே விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மோடி கூறிய விமர்சனங்களையும் நினைவூட்டினார்.
மேலும், மதுரை எய்ம்ஸ், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள், ஓசூர் விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உள்ளன என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டம் (FCRA) தொடர்பான திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் குறிவைக்கப்படுகின்றன என அவர் கூறினார். இதனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்படும் என்றும், சான்றுகள் சமர்ப்பிப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டால்கூட அங்கீகாரம் ரத்து செய்ய வாய்ப்பு உருவாகும் என்றும் எச்சரித்தார்.
இந்த மாற்றத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக பேசியுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இதில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் முன் பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்றார். கருணாநிதி குறித்து பழனிசாமி பேசியதாக கூறப்படும் கருத்துகளையும் அவர் கண்டித்தார்; மேலும் பழனிசாமியின் மனதில் “துரோகம் செய்த நஞ்சு” நிறைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பின்னர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்று தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.




