பசிபிக் பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் என கூறப்படும் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு, இந்தியாவின் மழைப்பொழிவு முறை மற்றும் தமிழகத்தின் நீர்வரத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பம் இயல்பை விட அதிகரிப்பது ‘எல் நினோ’; குறைவது ‘லா நினா’ என வகைப்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் லா நினா வலுவிழந்து வருவதால், இந்த ஆண்டு எல் நினோ உருவாகும் வாய்ப்பும், அதனுடன் இந்தியப் பெருங்கடலில் ‘ஐ.ஓ.டி.’ (Indian Ocean Dipole) மாற்றங்களும் ஏற்படலாம் என இந்திய வானிலைத் துறை சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர், அக்.–நவ. மாதங்களில் எல் நினோ உருவாகும் சூழல் இருப்பதாக தெரிவித்தார். வழக்கமான எல் நினோ காலத்தில் வெப்பநிலை சுமார் 1.5°C வரை உயரலாம்; ஆனால் ‘சூப்பர் எல் நினோ’ ஏற்பட்டால் கடல் வெப்பம் 3°C வரை உயரக்கூடும் என்றார்.
இந்த வெப்ப உயர்வு, சுமத்ரா தீவுகள் முதல் சோமாலியா வரை பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ‘ஐ.ஓ.டி.’ முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கலாம். இந்த ஆண்டு அக்.–நவ. மாதங்களில் நிகழ்வு உருவானால், அடுத்த ஆண்டு முதல் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் மழைப்பொழிவு கணிசமாக குறைந்து, தமிழகத்துக்கு நீர்வரத்து பாதிக்கப்படலாம்; பல மாநிலங்களில் வறட்சி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என அவர் கூறினார்.
அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழைக்காலத்தில் 2015ம் ஆண்டு அளவுக்கு அதிக மழை பெய்யும் வாய்ப்பும் இருப்பதாகவும், 2027 முதல் தொடர்ந்து சில ஆண்டுகள் வறட்சி தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.




